Tuesday, July 22, 2008

03081990 : 10.00 AM to 9.30 PM


 
இப் பிரதியில் வரும் பெயர், சம்பவம், இடம், ஏனைய அத்தனையும் எதுவித கலப்புமற்ற உண்மைகள்

குடும்பத்தில் அனைவரும் ஓரிடத்தில் கூடி கதைத்துக் கொண்டிருக்கும் நாட்களில் எல்லோரும் ஆளாளுக்கு ஒன்றாகவும் இரண்டாகவும் மட்டும் வாசிக்கின்றதோடு விட்டு விடுகின்ற அந்தக் குறிப்புக்களடங்கிய புத்தகத்தை தனியே திறந்து வாசிப்பதற்கு பத்துப் பதினைந்து வருடமாகக் காத்திருந்த ஒரு அமைதியான தருணம் வந்து மாட்டிக் கொண்டது.

எப்படியும் முழதாக ஒரு தரம் அதை வாசித்து முடிப்பதிலேயே மனம் குறியாகவிருந்தது.

01.

//நினைவுகள் படம்போல மனதுக்குள் ஓடுவதனைப் போல அவற்றை எழுதி பின் வாசிப்பதும்
சில பதிவுகளை அப்படியே எத்தனை யுகங்களின் பின்னென்றாலும் காட்ட வல்லன என்பதை இக்குறிப்புகள் உங்களுக்கு உண்மைப்படுத்தும்// என்ற வாசகங்கள் அதற்குள்ளிருந்த பேப்பர் அடுக்குகளில் முதலாவது பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

வேறாகக் களன்றிருந்த சிவப்புக்கலர் அட்டை முதலாவதாக இருந்தது.
“ சே வெள்ளிக்கிழமையுமதுவுமா இந்த சலூங்காரன் ஒத்தனும் வரலியே பாரம்மன..”
என்று முணுமுணுத்துக் கொண்டே வந்து மூத்தவள் பர்னாவின் வீட்டு உஞ்சிலில் ஆடத் தொடங்கினார் மாக்கார்
என்பதே தொடக்கமாகவிருந்தது.

அப்போது தனி வெள்ளைச் சேட்டும் தனி வெள்ளைச் சாரனும் உடுத்திருந்திருக்கிறார்.

அம்பலாந்துறைச் சந்தியில் முஸ்லிம் ஆக்களைக் கடத்தியதிலிருந்து தமிழ் மக்கள் ஊருக்குள் வருவதை நிப்பாட்டியிருந்தார்கள்.

கடத்தப்பட்டு இப்போதுதான் இரண்டு கிழமை என்பதால் ஏதோ ஒரு பதட்டம் ஊர் முழுக்க படர்ந்திருந்தது.
அந்நேரம் வெள்ளிக்கிழமை பத்துமணி
வெளித் திண்ணையில் உஞ்சில் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
“டேய் இஞ்ச ஓடியா மன”தனது வேர் ஒரு ஆண் வாரிசாக நீண்டிருப்பதாக அவரைப் பெருமிதப் படுத்திய ஜீவன் அவன்தானாம்.
அவரின் இரண்டரை வயது மகள்வழிப் பேரன்
உஞ்சிலை நிப்பாட்டுவதற்கிடையிலேயே பாய்ந்து ஏறி அவரின் மடியை நிரப்பிக் கொண்டான்.
அவனுடைய எந்தச் சாகசத்தின் போதும்
“ நூறு குரங்குட பவர்ரி மன ஒண்ட மகனுக்கு.. “ என்று சொல்வதில் பெருமிதம் அவருக்கு எப்போதும் இருப்பதாகவும் ஒரு விசேட குறிப்பு அதில் இருந்தது.

“ ரோட்டுக்கு ஓட உடாம அப்புடியே வெச்சிக்கங்க வாப்போ இன்னா வாரன் “ என்ற படியே பர்னா வந்து பார்க்க உஞ்சில் வெறுமையாகவிருந்தது.
மகனை முன் பாரில் நிப்பாட்டியபடி சைக்கிள் சந்தியில் மாறி மறைந்தது.
மாமரத்திலிருந்த படி ஒரு காகம் ஓயாமல் கத்திக் கொண்டேயிருக்கிறது.
காகம் கத்தியதோடு அவரைப் பத்தின எதுவும் அங்கு எழுதப்படவில்லை.

மிக வேகமாக இன்னொரு கற்றையை எடுத்துப் பார்க்க அது உம்மாவிலிருந்து தொடங்கியது.
02.“ அதுக்கிடையில எங்க வாப்பா இவனக் கொண்டு போன இந்த ஊத்தயோட” என்று என் உம்மா கேட்டதற்கு
“ இல்ல மன நாவக்குடாப் பக்கமாவது யாரும் கட துறந்திரிக்கானா எண்டு பாக்கத்தான் போன,
ஒருத்தனும் இல்ல மன” என சலிப்புடன் சொல்லிக் கொள்கிறார்.
“வெள்ளிக்கிழம நாத்து சேவ் எடுக்கயுமில்ல ….” எதையோ விரும்பியும் கேக்க முடியாத சங்கடம் அதில் தெரிய...
“ அப்ப வாங்க வாப்பா நான் சேவ் எடுத்துர்ரன்” என என் உம்மாவாகிய பர்னா கேட்க
“ ம்…இல்லமன .. ஆ செரி…” என்கிறார். இது மகிழ்ச்சியோடு வந்ததாம்.
“ நான் அங்கால போறன் கிணத்தடிய வா “என்றவாறு அங்கால போனார்.
ஒரே வளவுக்குள் பக்கத்தில் இருக்கின்ற சுபைதா சாச்சியின் வீடே அங்கால என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“ஒங்க ரெண்டு பேரயும் வெச்சே ஒரு சலூன்கட போடலாண்டி மன…” அங்காலக் கிணற்றடியில் சுபைதா பிடித்திருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டே நக்கலாக அவர் சொல்ல

“ஆ…ஆ. வாங்களன்” என்றவாறு சுபைதா உள்ளே போகிறாள்.
முதல் இக் கதைகளை நான் கேட்டிருக்கின்ற போதும் திரும்பத் திரும்ப வாசிப்பதில் புதிது புதிதாக நிறைய விளங்குகிறதை உணர்ந்தேன்.அந்தக் காகம் இப்போது கிணத்தடிச் சுவரில் நின்றபடி கத்திக் கொண்டிருக்கிறது.

அதே காகம்தான்.
அதன் கரகரத்த கா கா சத்தத்தோடு அந்தப் பேப்பர் கற்றையின் கடைசிப் பக்கம் முடிகிறது.
03.

இன்னொரு பாகத்தின் நிறைய பேப்பர்களை இணைத்திருந்த ஸ்டேப்ளர் பின் கரல் கட்டிப் போய் பேப்பரோடு உறைந்திருந்தது.

ஜும்ஆவுக்குப் போனதெல்லாம் அதில்தான் இருந்தது.
ஜும்ஆ கலைந்து வந்து எல்லோரும் சாப்பிடுகிறார்கள்,
அப்படியே அகப்பட்ட அகப்பட்ட இடங்களில் விழுந்து தூங்கிப் போகிறார்கள்.

மாக்கார் வாசலில் கிடந்த சீமெந்து பேக்கொன்றை எடுத்துக் கொண்டு வந்து சுபைதாவை எழுப்பத் தொடங்கினார்.

மணி முணரையாகிறது

“இஞ்ச.. மன கொஞ்சம் எழும்பன்”
“என்ன வாப்பா…” என்று சத்தம் மட்டும் வந்தது கண்கள் அப்படியே மூடியிருக்கிறது
சும்மா தூக்கமென்றால் அவள் எழும்பியிருக்க வேண்டும்
இந்த வரிகளின் கீழ் அடிக்கோடிடப் பட்டிருந்தது.
அதாவது
அந்த அஸர் நேரத்தில் ஏதோ பெரும் பாரமான ஒன்று விறாந்தைக்குள் தூங்கிய அத்தனை பேரினது தூக்கத்தையும் கலைந்து விடாதபடி அழுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.
“ இஞ்ச மனேய்…பேக்குலருந்து லேசா நூல எப்புடிப் பிரிக்கிறயெண்டு கேப்பியே..இஞ்சப்பாரு.. இப்புடித்தான்.”
என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவராக பார்த்தாளோ பார்க்கவில்லையோ என்ற எந்தக் கவலையுமின்றி நூலை மிக மிருதுவாக உருவியெடுத்து பூக்கல்லுக்குள் சொருகிவிட்டு சின்னவள் சபிக்காவை எழுப்பினார்.
அவள் சாய்மனைக்குள் சுருண்டு படுத்திருப்பது தெரிகிறது.
கிட்டத்தில் வருகிறார்.
ஜும்ஆவிலிருந்து வந்து கதவின் மூலையில் தொங்க விடப்பட்ட வெள்ளைக் கலர் புல்கை சேட்டை மடித்து முழங்கையின் கோடு சரியாக நடுவில் வருமாறு மடிப்பு இருக்கிறதா என இழுத்துப் பார்த்தபடியே
“ சபிக்கா.. சபிக்கோவ்.. பள்ளிக்குப் போப்புறன் எண்ட யாசின் கிதாப எடுத்தா மன.. கெதியாப் போகணும்”
“ அந்த மேசயிலான் இரிக்கி வாப்பா..”
சாய்மனைக்குள்ளிருந்தபடியே முதலில் பதில் சொல்கிறாள்.
பின் கனவு கண்டவள் போல எழும்பி மூடிய கண்களுடனேயே நடந்து போய் அதை வாப்பாவிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு...
மீண்டும் சாய்மனைக்குள்ளேயே விழுந்திருப்பாள் போலும்..
அது தெளிவாக இல்லை
வாப்பா போய்விட்டார்.

அவ்வளவோடு அந்தக் கற்றையின் கடைசிப் பக்கம்முடிகிறது.04.

அதற்கு அடுத்தாக இருந்த அவரின் கடையைப் பற்றினதும் ஒரு சம்பவமும் தவிர மற்றைய எல்லாம் கறுப்புக் கலர் நிறைந்த பக்கமாகவே இருந்தன.
அதனால் அதன் காட்சிகளும் கறுப்பானதாகவே மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன என எண்ணிக் கொள்க.
பள்ளிக்கு பக்கத்திலேயே என்பதால் அவர்ர கடைக்கு வெள்ளிக்கிழமையெண்டாலும் நல்ல சனம் வாறயாம்.
அதிகமான நாட்களின் வழமை போல பின்னேரம் அஞ்சரை மணியளவில் வீட்டுக் கடப்படியில் வாப்பா கடைக்கு வெளியில் வந்து கையைக் காட்டும் வரை காத்துக்கொண்டு நின்ற பர்னா அன்றும் நூறு குரங்குப் பவர் கொண்டவனாக மாக்காரின் சான்றிதழ் பெறுகின்ற அந்தப் பேரனை எந்தச் சைக்கிளுக்குள்ளோ வாகனத்திலோ அகப்பட்டு விடாதபடி போய்ச் சேரும் வரை பார்த்துக் கொண்டு நிற்க வெற்றிகரமாக அவரின் கடையை அடைந்து அதற்கென ஒரு கொஞ்சமும் வாங்கிக் கொள்கிறான்.
“ என்ன மன வேணும் “
“பெட்டாசி”
அவர் கேட்கும் வழமையான கேள்வியும் இதுதானாம்
அவன் சொல்லும் விடையும் இதுதானாம்.
அவனின் இரண்டரை வயது மொழியிலிருந்து அதை பெட்டிஸ் என்பதாக மொழிபெயர்த்துக் கொள்வாராம்.இரண்டு பெட்டிஸை பேப்பரில் சுத்தி கையோடு கொடுத்து வீட்டைப் போய்ச் சேரும் வரை பார்த்துக் கொண்டே நின்று விட்டு அவன் போன பின்னும் தன்னை மறந்து அப்படியே நின்றவர் திடீரென எதையோ நினைத்தவராய் கடைக்குள் போய்விடுகிறார்.

இதிலிருந்துதான் அந்த இருட்டுத் தொடங்குகிறது அந்தப் பேப்பர்களில்.

அப்போது இரவில் ஊரில் கரண்ட் இல்லை
புலி வாறயாம் என்ற செய்தியும் ஊருக்குள் பரவியிருந்ததால் பள்ளிக்குப் போகும் நேரம்தவிர வீதி நெடுக மையத்து பொம்பின் அமைதியும் இருட்டும்தான் நிரம்பிருந்தன.
மஹ்ரிபைத் தொழுதுவிட்டு வந்து செலவுக்கென்று எழுபதுரூபாய் காசை எடுத்து யாசீன் கிதாபோடு சேர்த்து மடித்து வைத்துக் கொண்டு இஷாவுக்காய் காத்திருக்கிறார்.05.
“அல்லா..ஹ{ அக்பர்…”“அல்லாஹ{… அக்ப…”
“லா..இலாஹ இல்லல்லா….ஹ்”
பள்ளிக்கு மிகவும் கிட்டத்தில் என்பதால் அத்துல் காதர் முஅத்தினாரின் பாங்கு வீட்டில் மிகவும் நெருக்கமாகக் கேட்பது இப்படித்தான்.
“வாங்கும் முடிஞ்சி டக்கெண்டு தாபுள்ளேய்” என்று அவசரமாக பிலேன்டியை பர்னாவிடம் வாங்கிக் குடித்து விட்டு மூன்றாவது காக்காவும, தம்பியும் பள்ளிக்குப் போக இரண்டாவது காக்கா மெல்ல மெல்ல ஆற வைத்துக் குடித்துக் கொண்டிருக்கிறார்.
தனியே இருக்கப் பயத்தில் காக்காவோடு அங்கால போய் இஷாவையும் தொழத் தொடங்கி விட்டாள் பர்னா
மூன்றாவது ரகாத்துக்காக அவள் நிலைக்கு வந்த நேரம் 8.13 என்று எழுதியிருந்ததை வெட்டி பிறகு 8.14 என்று எழுதியிருந்தார்கள்

இது கடும் இருட்டான ஒரு பேப்பரில் இருந்தது.
“ மளீர் “
இதுதான் முதலாவதாகக் கேட்ட சத்தம்.
மகன் ஓடிவந்து கட்டிப் பிடிக்க தொடர்ந்து கேட்கத் தொடங்கிய வெடில் சத்தம் பர்னாவைத் தொழ விடுகுதில்லை..
அந்நாசர் ஸ்கூலின் முகட்டிலும் மையத்துபொம்பு வேப்பமரத்திலும் மாறி மாறி முட்டி அந்தச் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்ததைக் காட்ட நெளிந்த அலை அலை போல கோடுகளைக் கீறியிருந்தார்கள்.
எல்லோரும் கதவு ஜன்னல் எல்லாத்தையும் பூட்டி விட்டு புகைக் கூட்டு பிளேட்டுக்குக் கீழ் தஞ்சம் புகுந்தனர்.

வழமையாக வெடில் கேட்டால் இதுதான் நடைமுறையாம்.

வீட்டுக்குள் இரண்டாவது காக்காவும் இருக்கிறார் என்பது விளங்குகிறது..
8.25 அளவில் சத்தம் ஓய எல்லோரும் அமைதியாக மட்டும் இருக்கிறார்கள்.
06.
யாரோ கதவைத் தட்டுகின்ற சத்தம் கேட்கிறது.பூக்கல்லுக்குள்ளால் எட்டிப்பார்க்க அங்கே தம்பி தெரிகிறார்
“யாரு காக்கா”சுபைதா கேட்க“அக்பர்தான்”என்றபடி மற்றெதையும் சொல்லாமல்தான் கதவைத் திறக்கிறார்.
இருட்டுக்குள் சுடச்சுடக் குடித்த பிளேன்டியின் வேகத்தைவிடவும் இரத்தம் அதிகமாகவே ஓடியிருந்தது

தனிச் சிவப்பாகத் தெரிகிறது அவரின் உடம்பு முழுவதும்..
அந்நேரத்தில் நிசப்தத்துக்கென ஒரு துளியும் இடைவெளி வைக்காமல் அத்தனை பேரும் வீரிட்டு அலறுகிறார்கள்.
மெல்ல அவரைத் துறைத்தார்கள்
தொடையில் ஓட்டைக்குள் T56 புல்லட்டும் கண்ணுக்குக் கொஞ்சம் கீழே வெடித்த கிரனைட்டின் தகட்டுத்துண்டும் தெரிந்தது.
காக்காவின் தோழை அவர் மெல்லப் பிடித்து சுவரில் சாய்ந்திருந்த படியேகாதுக்குள் மெதுவாக

“ வாப்பா மௌத்தாகிட்டாங்க… யாரையாவது அனுப்பி மையத்த எடுங்க”
“ கயாத்துக் கலந்தர் மாமாவும் மௌத்து”
“ ரிஸ்வானும் ஆரிபுத் தம்பியும்மௌத் “
“ பர்தாத்தாட மசசானும்…” முடிப்பதற்கு முதலேயே அவர் மயங்க வேனில் வந்த யாரோ மெத்தைப் பள்ளிக்காம் என்று சொல்லி தூக்கிக் கொண்டு போனார்கள்.

அவரால் சொல்லி முடிக்க முடிக்காமல் போன இன்னும் மூன்று குடும்பத்தவர்களின் மையத்துச்
செய்தியும் பிறகுதான் கிடைத்ததாம்

ப்போது இரவு 8.35 ஆகியிருந்தது
எனக்கு இருட்டு மட்டும்தான் தெரிகிறது.
07.
இந்தப் பக்கத்தில் பந்திகள் இல்லாமல் சிறு சிறு குறிப்புக்களாகவே ஆளாளுக்கு எழுதிவைத்திருந்தார்கள்.சுபைதாவின் விறாந்தைக் கதவுக்கு முன்னால் மாக்காரைக் கொண்டு வந்து வழத்தாட்டினார்கள்.
வாப்பாவைக் கண்டவுடன் பாயை விரித்து தலவாணியும் போட தூக்கிவந்தவர்களோ அதைத் தூக்கி எறிந்து விட்டு கிப்லாவுக்கு மிகநேராக திருப்பி வைத்துவிட்டுப் போனார்கள்.
அப்போது இரவு எட்டேய முக்கால் இருக்கும்.
பின்னேரத்திலிருந்து நெஞ்சுக்குள் இடிக்கத் தொடங்கியது பற்றி அதன்பின் யாரும் அதில் குறிப்பிடுகிறார்களில்லை.

பிறகு கேட்ட நூற்றியிரண்டு மரணச் செய்திகளில் ஒன்றேனும் அவர்களில் எந்த அசைவையும் தரவில்லை என்றும், எல்லோரும் ஒரு கருத்துப்பட மரணம் அத்துப்படியான அரசியல்வாதச் செய்திகள் போல அந்த ஒரே இரவோடு ஆகிப் போனதாகவும் சொல்கிறார்கள் அதில்.
மாக்காரின் ஜனாசாவை இறுக்கிச் சுற்றியிருந்த வெள்ளைப் புடவையில் ஈரலுக்கருகிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.

அதிலும் ஒரே இருட்டு
அப்போது கொழுத்தப்பட்ட சிமிளி லாம்பு கீழே விழுந்து நொறுங்கிப்போனது இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது காதுக்குள்.
ஒம்பதரை மணியளவில் வேனில் வந்து மெத்தைப் பள்ளிக்கு குளிப்பாட்ட ஜனாசாவாகிய மாக்காரை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.
அதனோடு சேர்த்து பின்வருமாறிருந்தது.

கணவனாகவும் வாப்பாவாகவும் வாப்பாவாப்பாவாகவும் மாமாவாகவும் சாச்சாவாகவும் பெரியப்பாவாகவும் மச்சானாகவும் நூறு குரங்குகளின் பவர் கொண்ட ஒரு இரண்டரை வயதுப் பேரனுக்கு வாப்பப்பாவாகவும் இருந்து இயங்கிய ஒரு ஆன்மாவை இல்லாததாக்கி திரும்ப அழைத்துக் கொண்டது மரணம்.
இந்த உலகத்தின் கடைசி நாள் வரைக்குமாக அதன் நீண்ட டயரியில் எழுதப்படுகின்ற நல்ல வரிகளில் ஒன்றாக மாக்காரும் எழுதப்பட்டுப் போனார்.

கடைசியாக பெட்டிஸ் கீமாவில் அரைக்கப்பட்டிருந்த உள்ளியின் வாசம் ஒரு ஏவுறையாக எனக்குள்ளிருந்தும் வெளியேறிற்று என்ற குறிப்பையும் எனது பெயர் எழுதப்பட்டிருந்த ஒரு கறுப்புப் பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டேன் பதினெட்டு வருடங்களின் பின்..
அறவே வாசிக்க முடியாதபடி சிதைந்து போனதாக முடிவெடுத்துக் கொண்ட சில கறுப்புப் பேப்பர்களிலிருந்து நான் கீழ்வரும் வசனங்களையும் பெற்றுக் கொண்டேன்

இது வரை நிறையப் பேர் வாசிக்காதவை அவை
* மையத்து வாசலைத் தாண்டும் போது அன்றுதான் க்ளீன் ஷேவ் செய்த முகத்தில் நிலவுபட்டு பளிச்சென்று தெறித்ததை என் உம்மா பர்னா அந்நேரத்தில் காணவில்லை என்றும்* நூலைப் மெதுவாகப் பிரித்துக் காட்டியதன் குறியீட்டை என் சாச்சி சுபைதா விளங்கிக் கொள்ள ஏழாம் கத்தம் வரை எடுத்தது என்றும்
* இளைய சாச்சிமா எடுத்துக் கொடுத்த யாசீன் கிதாபும் எழுபது ரூபாய் காசும் இரத்தத்தோடு அதே மடிப்புடன் இன்னும் இருக்கிறது என்றும் இருந்தது.எனக்குப் பின்னும் மாக்கார் பற்றின கதையை தொடர்ந்தெழுத யாருமில்லாததால் பிறகு பிறந்த அனைவரும் வாசிக்குமாறாய் அதை மின் பிரதியாக்கத் தொடங்கியிருக்கிறேன்.

அத்தோடு கடைசியாக இருந்த வரியில் முற்றும் என்பதையும் நானே போட்டுக் கொண்டேன்.
நன்றி : சிவப்பு
03-08-2008

No comments: