Sunday, August 3, 2014

மூத்தவாப்பாவும் இருபத்து நான்காவது ஆகஸ்ட் மூன்றும்பள்ளியில் புலிகள் வந்து சுட்டு இன்றோடு இருபத்து நான்கு வருடங்களாகிறன.
அப்போது எனக்கு இரண்டரை வயதுதானென்றாலும் இன்றுவரை அவர் இல்லாததை உணர்ந்து விடாத வண்ணம் உம்மாவும் உம்மம்மாவும் எனக்குள் மூத்தவாப்பா என்பவரை கதைவழியாக வாழவைக்கும் அற்புதத்தைச் செய்தே வருகிறார்கள்.
இன்று எப்படியும் வீட்டுக்கு பேசிவிடக் கூடாது, அதைப் பற்றி நினைக்கவே கூடாது என்று உறுதியாக இருந்தும், என்னை மீறிய ஏதோவொரு அழுத்தம் இதைப் பகிரத் தூண்டுகிறது.

ஏழு பேரின் மரணங்களையும் இருபத்தி மூன்று பேரின் படுகாயங்களையும் ஒரேயிரவில் சந்தித்த ஒரு குடும்பத்தின் மொத்தக் கதைகளும் எனக்குள் எப்போதும் அழுத்திக் கொண்டேயிருக்கும்.
இதை வீட்டில் ஒவ்வொரு வருடமும் நினைக்கமாட்டார்கள்.
எப்போதெல்லாம் அனைவரும் ஒன்றாகக் கூடுகிறார்களோ, அப்போதெல்லாம் அனைவருக்கும் கண்ணீர் வரும்.

குடும்பத்தில் எந்தவொரு மகிழ்ச்சியான ஒன்றுகூடலாயினும் உம்மம்மா ஒரு மூலையில் இருந்து கொண்டு "ஹறபாப்போன பிரபாகரன்" என்றபடி முந்தானையால் கண்களைத் துடைப்பார்.
கொஞ்சம் அரசியல் அதிகம் தெரிந்த மாமாவோ சாச்சாவோ "கண்ணைத் திண்ட பிரேமதாசா" என்பார்.
இல்லாவிட்டால் "சதியில போவான்" என்று ஊருக்குள்ள புலியக் கூட்டி வந்து காட்டிக் கொடுத்த பழைய ஊர்த்தலைவரொருவருக்கு வசை விழும்.

இதைத் தவிர எந்த அரசியலுமே தெரியாத இந்த அப்பாவி மானுடங்களையும் சுட்டுப் போன யுத்தம் இனி எந்தத்தலைமுறைக்கும் ஒரு தெரிவாகக் கூட இருந்துவிடக் கூடாதென்றே ஒவ்வொரு முறையும் வெப்புசாரத்தோடு நான் எண்ணிக்கொள்வேன்.

புதுக் கண்ணீரோடும் புதுப் புலம்பல்களோடும் ஆயிரம் கதைகள் நூற்றி மூன்று குடும்பங்களிடையேயும் திரும்பவும் பேசப்படப் போகும் இன்று, நான் எங்கள் வீட்டின் சம்பவங்களை ஒரு கோர்வையாக எழுதி வைத்த குறிப்பிலிருந்து மூத்தவாப்பா பற்றின கடைசிப் பகுதிகள் இரண்டையும் இங்கே இணைக்கிறேன்.
அதிலுள்ள மற்றையவற்றிலுள்ள குறும் அரசியல் நிலைப்பாடுகளை விட்டும் எப்போதோ கடந்து வந்து விட்டதால், மூத்தவாப்பா பற்றிய இப் பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

06.
யாரோ கதவைத் தட்டுகின்ற சத்தம் கேட்கிறது.
பூக்கல்லுக்குள்ளால் எட்டிப்பார்க்க அங்கே தம்பி தெரிகிறார்
“யாரு காக்கா”சுபைதா கேட்க“அக்பர்தான்”என்றபடி மற்றெதையும் சொல்லாமல்தான் கதவைத் திறக்கிறார்.

இருட்டுக்குள் சுடச்சுடக் குடித்த பிளேன்டியின் வேகத்தைவிடவும் இரத்தம் அதிகமாகவே ஓடியிருந்தது

தனிச் சிவப்பாகத் தெரிகிறது அவரின் உடம்பு முழுவதும்..

அந்நேரத்தில் நிசப்தத்துக்கென ஒரு துளியும் இடைவெளி வைக்காமல் அத்தனை பேரும் வீரிட்டு அலறுகிறார்கள்.
மெல்ல அவரைத் துடைத்தார்கள்.

தொடையில் ஓட்டைக்குள் T56 புல்லட்டும், கண்ணுக்குக் கொஞ்சம் கீழே வெடித்த கிரனைட்டின் தகட்டுத்துண்டும் தெரிந்தது.
காக்காவின் தோளை அவர் மெல்லப் பிடித்து சுவரில் சாய்ந்திருந்தபடியே காதுக்குள் மெதுவாக
“ வாப்பா மௌத்தாகிட்டாங்க… யாரையாவது அனுப்பி மையத்த எடுங்க”
“ கயாத்துக் கலந்தர் மாமாவும் மௌத்து”
“ ரிஸ்வானும், ஆரிபுத் தம்பியும் மௌத் “
“ பர்தாத்தாட மச்சானும்…” முடிப்பதற்கு முதலேயே அவர் மயங்கி விழ, வேனில் வந்த யாரோ மெத்தைப் பள்ளிக்காம் என்று சொல்லி தூக்கிக் கொண்டு போனார்கள்.

அவரால் சொல்லி முடிக்க முடிக்காமல் போன இன்னும் மூன்று குடும்பத்தவர்களின் மையத்துச் செய்தியும் பிறகுதான் கிடைத்ததாம்.

அப்போது இரவு 8.35 ஆகியிருந்தது.

எனக்கு இருட்டு மட்டும்தான் தெரிகிறது.

07.
இந்தப் பக்கத்தில் பந்திகள் இல்லாமல் சிறு சிறு குறிப்புக்களாகவே ஆளாளுக்கு எழுதிவைத்திருந்தார்கள்.

சுபைதாவின் விறாந்தைக் கதவுக்கு முன்னால் மாக்காரைக் கொண்டு வந்து வழத்தாட்டினார்கள்.

வாப்பாவைக் கண்டவுடன் பாயை விரித்து தலவாணியும் போட முயல, தூக்கிவந்தவர்களோ அதைப் பறித்து எறிந்து விட்டு கிப்லாவுக்கு மிகநேராகத் திருப்பி வைத்துவிட்டுப் போனார்கள்.
அப்போது இரவு எட்டேய முக்கால் இருக்கும்.
பின்னேரத்திலிருந்து நெஞ்சுக்குள் இடிக்கத் தொடங்கியது பற்றி அதன்பின் யாரும் அதில் குறிப்பிடுகிறார்களில்லை.

பிறகு கேட்ட நூற்றியிரண்டு மரணச் செய்திகளில் ஒன்றேனும் அவர்களில் எந்த அசைவையும் தரவில்லை என்றும், எல்லோரும் ஒரு கருத்துப்பட மரணம் அத்துப்படியான அரசியல்வாதச் செய்திகள் போல அந்த ஒரே இரவோடு ஆகிப் போனதாகவும் சொல்கிறார்கள் அதில்.

மாக்காரின் ஜனாசாவை இறுக்கிச் சுற்றியிருந்த வெள்ளைப் புடவையில் ஈரலுக்கருகிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.
அதிலும் ஒரே இருட்டு
அப்போது கொழுத்தப்பட்ட சிமிளி லாம்பு கீழே விழுந்து நொறுங்கிப்போனது இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது என் காதுகளுக்குள்.
ஒம்பதரை மணியளவில் வேனில் வந்து மெத்தைப் பள்ளிக்கு குளிப்பாட்டவென ஜனாசாவாகிய மாக்காரை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

அதனோடு சேர்த்து பின்வருமாறிருந்தது.

கணவனாகவும், வாப்பாவாகவும், வாப்பாவாப்பாவாகவும், மாமாவாகவும், சாச்சாவாகவும், பெரியப்பாவாகவும், மச்சானாகவும், நூறு குரங்குகளின் பவர் கொண்ட ஒரு இரண்டரை வயதுப் பேரனுக்கு வாப்பப்பாவாகவும் இருந்து இயங்கிய ஒரு ஆன்மாவை இல்லாததாக்கி திரும்ப அழைத்துக் கொண்டது மரணம்.
இந்த உலகத்தின் கடைசி நாள் வரைக்குமாக அதன் நீண்ட டயரியில் எழுதப்படுகின்ற நல்ல வரிகளில் ஒன்றாக மாக்காரும் எழுதப்பட்டுப் போனார்.

கடைசியாக பெட்டிஸ் கீமாவில் அரைக்கப்பட்டிருந்த உள்ளியின் வாசம் ஒரு ஏவுறையாக எனக்குள்ளிருந்தும் வெளியேறிற்று என்ற குறிப்பையும் எனது பெயர் எழுதப்பட்டிருந்த ஒரு கறுப்புப் பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டேன் பதினெட்டு வருடங்களின் பின்..

அறவே வாசிக்க முடியாதபடி சிதைந்து போனதாக முடிவெடுத்துக் கொண்ட சில கறுப்புப் பேப்பர்களிலிருந்து நான் கீழ்வரும் வசனங்களையும் பெற்றுக் கொண்டேன்

இது வரை நிறையப் பேர் வாசிக்காதவை அவை

* மையத்து வாசலைத் தாண்டும் போது அன்றுதான் க்ளீன் ஷேவ் செய்த மாக்காரின் முகத்தில் நிலவு பட்டு பளிச்சென்று தெறித்ததை என் உம்மா அந்நேரத்தில் காணவில்லை என்றும்

* நூலைப் மெதுவாகப் பிரித்துக் காட்டியதன் குறியீட்டை என் சாச்சி விளங்கிக் கொள்ள ஏழாம் கத்தம் வரை எடுத்தது என்றும்

* இளைய சாச்சிமா எடுத்துக் கொடுத்த யாசீன் கிதாபும் எழுபது ரூபாய் காசும் இரத்தத்தோடு அதே மடிப்புடன் இன்னும் இருக்கிறது

என்றும் இருந்தது.

எனக்குப் பின்னும் மாக்கார் பற்றின கதையை தொடர்ந்தெழுத யாருமில்லாததால், பிறகு பிறந்த அனைவரும் வாசிக்குமாறாய் அதை மின் பிரதியாக்கத் தொடங்கியிருக்கிறேன்.

அத்தோடு கடைசியாக இருந்த வரியில் முற்றும் என்பதையும் நானே போட்டுக் கொண்டேன்.

நன்றி : சிவப்பு
03-08-2008

கதைகளுக்குள்ளும் தெளிவில்லாத அவ்வப்போதைய கனவுகளுக்கும் என்னோடு வாழ்ந்து வரும் மூத்தவாப்பாவின் பெயரால் என்னுடைய தலைமுறையிலேனும் யுத்தம் கடந்த காலத்து சம்பவமாகத் தொலைந்து போய்விடட்டும்.* மாக்கார் - மூத்தவாப்பாவின் பெயர்
* நூறு குரங்குகளின் பவர் கொண்ட குரங்கு- என்னை அவர் தோளில் ஏற்றும் போது பெருமிதமாகச் சொல்வதுNo comments: