Friday, October 2, 2015

பௌத்த மதத் தீவிரவாதமும் இலங்கை முஸ்லிம்கள் கவனமெடுக்க வேண்டிய அரசியல் முனைப்புக்களும்- ஒரு கருத்துப் பகிர்வு


(02-05-2013 வியாழக்கிழமை இலங்கையின் விடிவெள்ளி பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய கட்டுரையானது நண்பர்களின் வாசிப்புக்காக நன்றியுடன் இங்கே வலையேற்றப்படுகிறது.)


ஏப்ரல் மாதம் 20ம் திகதி 2013 சனிக்கிழமையோடு இலங்கை தம்புள்ளைப் பள்ளிவாயல் அத்துமீறல் நடந்து ஒரு வருடமாகிறது.

“அங்கே நான் பார்த்துவிட்டுத்தான் வந்தேன், ஊடகங்கள் சொல்வது போல எதுவித பிரச்சினைகளும் கிடையாது. இரண்டொரு தகரங்கள் கழன்றிருந்தன, வேறொன்றுமில்லை. நானும் அங்கே தொழுதுவிட்டுத்தான் வருகிறேன்” என்று தம்புள்ளைச் சம்பவத்துக்கு மறுநாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் முட்டாள்தனமான ஊடக அறிக்கை விடப்பட்டும் அதே ஒரு வருடம் முடிகிறது.

அதிலிருந்து தொடங்கி இன்று வரைக்கும் இலங்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அண்ணளவாக பதினைந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மதவிரோதச் செயற்பாடுகள் தெளிவான வன்முறைகளாக பௌத்த தீவிர வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், இது பற்றி முஸ்லிம் சிவில் சமூகமும் புத்திஜீவித்துவமும் வெறுமனே அரசியல்வாதிகளை விமர்சிப்பதைத்தாண்டி என்ன செய்ய முடியுமான பலத்தினைக் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்வதும், இப்பிரச்சினை தெள்ளத் தெளிவான அரச நிகழ்ச்சி நிரலாகவே அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் இதற்கான அழுத்தங்களையோ அவற்றுக்கெதிரான தமது குரல்களையோ பதிவுசெய்வதில் அரசாங்கத்தோடு இன்னமும் இணைந்திருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரதிநிதிகளின் மௌனம் குறித்த மீளாய்வுமாக இக்கட்டுரையைத் தொடங்கலாம்.

ஒரு பிரச்சினையை அதன் உண்மையான வடிவில் புரிந்துகொண்டு விடுவதே அதனைத் தீர்ப்பதற்கான பெரும் உந்து சக்தியாகிவிடும் என்பது முரண்பாட்டுக் கல்வியில் முக்கியமான படிமுறையாகும்.

எவ்வாறு “பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்” (War on Terror) என்பது “பயங்கரவாதம்” (Terrorism) என்கின்ற ஒரு கெட்ட கோட்பாட்டுக் கெதிரான யுத்தமாகக் காட்டப்பட்டுக்கொண்டே கடந்த இரண்டு தசாப்த உலக அரசியலில் மிகக் கொடுமையான மனித இன அழிப்பினைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றதோ, அதே விதியினைப் பின்பற்றி இலங்கையை ஒரு தனித்த பௌத்த நாடாக்கிவிடுவதற்கான எத்தனம் தமிழினத்தின் மீதான பெரும் அழிப்பு நடவடிக்கையினை நிகழ்த்திய கையோடே இலங்கையின் அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்களின் மீது இன்னொரு பெயரில் மாறியிருக்கிறது என்பதே என்னைப் பொறுத்த வரைக்கும் இவ்விவகாரம் பற்றிய எளிய புரிதலாகவிருக்கிறது.

உண்மையில் இந்த இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்புலமாகச் செயற்படும் சக்திகளைக் குறித்தும் இவற்றுக்கு அரச பாதுகாப்பளித்து எதிர்ப்பிரச்சாரங்களில் கலந்துகொள்ளும் பாதுகாப்புச் செயலாளர் போன்ற அரச உயர் தரப்புகளின் குறித்தும், அவர்களுக்கூடாகக் கடத்தப்பட்டுவரும், பௌத்தப் பேரினவாத அரசியல் வரலாற்றின் தொடர்புகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மதவாத அரசியலின் கொடிய வரலாற்று இயங்கியலானது அதனுடைய அடுத்தடுத்த தலைமுறைகளின் மீது அதி தீவிரத்தன்மையுடன் தனது தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதற்கு இலங்கையின் திரித்தெழுதப்பட்ட பௌத்தமயப்பட்ட அரசியல் வரலாறு நமக்குத் தெளிவான சான்றாகும். இதை நாம் அநகாரிக தர்மபாலாவின் பௌத்த தீவிரவாத சித்தாந்தங்கள் தொடங்கி கண்டியில் நடந்த சிங்கள-முஸ்லிம் கலவரம் வரை நீட்டிச் சென்று அவதானிக்க முடியும்.

ஒரு அரசினை மதவாத அரசாக்குகின்ற விதைகள் அறவே தென்படாதவாறு வரலாற்றில் எவ்வாறு விதைக்கப்படுகின்றன என்பதற்கும் அத்தகைய மதத் தூய்மையாக்கலையே நோக்காகக் கொண்டு அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் எவ்வாறு தொடராகக் காய் நகர்த்திவருவார்கள் என்பதற்குமான உதாரணங்களாக இலங்கை அரசியல் வரலாற்றில் நிறையவே காட்டிவிட முடியும்.

தற்போது அப்பட்டமாகவும் தெளிவாகவும் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மதத் தீவிரவாத முகமானது நம்மிடையே அதிகமானவர்களுக்கு புதிதானது போல ஆச்சரியம் தந்தாலும் வரலாற்றை உற்று நோக்கும் எவருக்கும் இது இலங்கை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெறும் இனங்களுக்கெதிரான பௌத்த தூய்மையாக்கலின் நிகழ்ச்சி நிரல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதை இன்னொரு வகையில் கூறுவோமானால் இலங்கை அரசியலில் பௌத்த மதத்துக்கான செலவாக்கானது முன்னர் இருந்தவர்களால் வேறு வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டதன் விளைவு அதற்குப் பின்னாலிருந்த பௌத்த மத அடிப்படைவாதத்தினைப் பிரித்து அடையாளங்காட்டவில்லையென்றும் கூறலாம்.

அவ்வாறில்லையென்று வாதிட இயலாதவாறு இலங்கையின் அரசியல் வரலாறு நிகழ்ந்து வந்திருப்பதே இங்கு கவனங்குவிக்கப்பட வேண்டியதுமாகும்.

சுதேச பாரம்பரிய இன வரலாறும் பரம்பலும் உரித்தும் கொண்டிருக்கின்ற நான்குக்கும் மேற்பட்ட இனங்களும் வாழும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான யாப்பானது பௌத்த மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கானதாக மட்டுமே பேரினவாதிகளால் வரையப்பட்டிருப்பதையே இதற்கு எளிய உதாரணமாக முன்வைத்திட முடியும்.

(ஜனநாயகம் சோசலிஷம் போன்ற கவர்ச்சித் தலையங்கங்களை உள்ளே உள்ளடக்கத்தில் பூச்சியத்தினால் பெருக்கிவிடுகின்ற யாப்பின் CHAPTER II Article 09 மட்டுமே இதற்கு ஆவணத்தில் காட்டப் போதுமான சான்றாகும்)

எது எப்படியாயினும் பௌத்த மேலாதிக்கம் என்பது இலங்கையின் அரசியலில் எதுவித மாற்றுக் கேள்விகளுக்கம் இடமின்றி முடிந்த முடிவாக வளர்க்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதும் அவற்றின் மதத் தூய்மையாக்கல் (Religious Cleansing) செயற்றிட்டத்துக்கான கருவிகளாக மட்டுமே இனப் பிரச்சினையும் சரி மத முறுகல் நிலைகளும் சரி தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புரியப்படுவதும் ஒரு உரையாடத்தக்க பார்வையென்றே தோணுகிறது.

உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடே ஒரு அரசின் அடுத்த கட்ட அவசர நிகழ்ச்சி நிரலானது மதப் பரம்பலாகவும், முஸ்லிம் பூர்வீக நிலங்களில் அத்துமீறிய கட்டாயக் குடியேற்றங்களாகவும் இருப்பதானது ஒரு மதத் தீவிரவாதம் ஊறிப் போனதும் அதையே நோக்கமெனக் கொண்டதுமான ஆட்சி முறையில் மட்டுமே சாத்தியம் என்பதும் அவதானத்துக்குரியது.

2009களிலிருந்து இராணுவக் குடியேற்றங்களுக்கென இராணுவ முனையில் அபகரிக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம் காணிகள் மற்றும் வலுக்கட்டாயமாக அவசியமற்று உருவாக்கப்படும் பௌத்த வழிபாட்டுத் தலங்களும், திடீர்த் திடீரெனத் தோண்டியெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளும் இதனையே நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கான பௌத்த தூய்மையாக்கலின் இன்னொரு படிமுறைதான் பொது பலா சேனாவின் அறிமுகமும் தம்புள்ளைப் பள்ளிவாயல் தாக்குதலும் எனலாம்.

என்னைப் பொறுத்த வரை எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமுகத்தின் மீது மிக இலகுவாகவே கலாசார, பொருளாதார, உயிர், உடமைகளின் மீதான அழிப்புக்களாகத் தாக்குதல்களையும் அழிப்பு நடவடிக்கைகளையும் தொடங்கிவிட முடியுமென்ற நம்பிக்கையை 2000த்தின் தொடக்க காலத்திலிருந்து அரசுகள் நம்பத் தொடங்கிவிட்டன.

இவ்வாறு இன அல்லது மதத் தூய்மைப்படுத்தலை நோக்காகக் கொண்ட அரசுகள் எப்போதும் தன்னுடைய யுத்தங்களுக்கம் மனிதப் படுகொலைகளுக்கும் நியாயங் கூறுவதற்கென ஒவ்வொரு அரசியல் சொல்லாடலை உருவாக்கிக் கொள்ளுவதே பாசிச முறைமையாகும்.

இலங்கையைப் பொறுத்த வரை எவ்வாறு தமிழ் சிறுபான்மை மீதான இன அழிப்பை (Ethnic Cleansing) செய்வதற்கு தமிழீழக் கோரிக்கையானது ஒரு பொதுக் காரணமாக மாற்றப்பட்டதோ அதே பாணியிலான ஆனாலும் சற்று முன்னேற்றமடைந்த பொறிமுறையாகவே இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் மீதும், பொருளாதாரத்தின் மீதும், நிலங்களின் மீதும், அரசியல் இருப்பின் மீதுமான அச்சுறுத்தல்களையும் பார்க்க வைக்கிறது.

இலங்கையின் தூய பௌத்தமயவாக்கத்துக்கான பொதுக்காரணியாக முஸ்லிம்களின் மீது மதமும் மத நம்பிக்கை சார் அனுட்டானங்களும் ஏவிவிடப்பட்டிருக்கின்றன என்பதே இதில் உண்மையாகும்.

இது தமிழ் அல்லது ஈழம் போன்ற சிக்கலான பொறிமுறைகளன்றி முஸ்லிம்களைப் பொறுத்த வரைக்கும் மிக இலகுவாகப் பேரினவாத நிகழ்ச்சி நிரலினால் தூண்டப்பட முடியுமாயிருந்ததற்குக் காரணம் “இஸ்லாம்” என்கின்ற சொல்லேயாகும்.

சர்வதேசத்தின் அரசியல் கோட்பாட்டில் முக்கியமாக தத்துவார்த்த இடத்தையும் விவாதத்துக்கான வெளியையும் பிடித்திருக்கின்ற (Mostly Influenced) அரசியல் சொல் என்று இஸ்லாத்தைக் கூறலாம்.

இம்முறை ஒஸ்கார் அகடமி விருதில் கூட இரண்டு முதலிடங்கள் பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் (War on Terror) பற்றிய இரண்டு திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் கூட உலக அரசியல் போக்கில் “இஸ்லாம்” அல்லது “அரசியல் இஸ்லாம்” என்கின்ற சொற்களின் அரசியல் செல்வாக்கினையே காட்டிநிற்கின்றது.

அதன் விளைவாகத்தான் எந்த பௌத்தர்களும் எதிர்த்துப் பேசத் தயங்கும் விதத்தில் பௌத்த பிக்குகள் தற்போது முஸ்லிம் விரோத வன்முறைகளைத் தலைமை தாங்குமாறு தூண்டிவிடப்பட்டுப் அரச பாதுகாப்பும் தரப்பட்டிருக்கிறார்கள் எனலாம்.

இந்நிலையில்தான் முஸ்லிம் சமுகத்தின் உட்கட்டமைப்பானது பலப்படுத்தப்பட வேண்டிய தேவையும் சிவில் சமுகத்தின் அரசியல் பலமானது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மீறி ஒரு ஒழுங்குக்குள் திரட்டியெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வெகுவாக உணரப்படுகின்றது.
இதுவே மிக முக்கியமான இரண்டு செயற்பாடுகளை அவசியப்படுத்துகிறது.

அதில் முதலாவது பாராளுமன்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நேரடி அரசியலிலுள்ள மாற்றுச் சிந்தனையாளர்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்.

மற்றது முஸ்லிம் அரசியலில் செயற்படும் சிவில் தரப்புக்கள், அரசியல் அமைப்புக்கள், தனிநபர்கள், ஆளுமைகளுக்கிடையிலான உரையாடல்.

இங்கே அரசியல் பிரதிநிதிகள் என்ற சொல்லாக்கம் நம்மை 1980களின் இறுதிக்கு அழைத்துச் செல்வதாகவோ எமது போராட்ட வழிமுறையான அரசியல் இயக்கம் போன்ற ஒன்றுக்கும் உதவாத சுயநலவாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களையும் மேலோட்டமாக விமர்சிப்பதாகவோ நின்று விடுவதாக இனியும் இருக்கத் தேவையில்லை.

சிவில் சமுக முதன்மைக் கருத்துக்களோடும் சமுக விமர்சனங்களோடும் மாற்று அரசியல் கருத்துக்களை உட்செரித்து வெளிவரத் தொடங்கியிருக்கும் முஸ்லிம் மாற்று அரசியல் கட்சிகள் குழுக்கள் தனிநபர் ஆளுமைகள் என எல்லாத் தரப்புக்களின் மீதுமாகக் கவனத்தைக் குவிக்க வேண்டியது அவசியமாகும்.
தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்தைத் தொடர்ந்து அதை மேற்கொண்ட பௌத்த பிக்கு கூட பகிரங்கமாக தேசிய ஊடகங்களில் அதை ஒத்துக்கொண்ட போது அங்கு எதுவுமே நடக்காதது போலவும் அது அதிகாரத்திலிருப்பவர்களுக்கு ஒரு அசௌகரியத்தைத் தோற்றுவித்துவிடாத வகையிலும் அறிக்கை விட்டதும், மௌனமாகக் காலங்கடத்தியதும் விலைக்கு அடிமாடுகளாக வாங்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற அமைச்சர்கள்தான் என்பதை இந்த ஒரு வருடத்தில் நமது நினைவிலிருந்து அகன்றிருக்க முடியாதது.

அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் தெஹிவளை மதரசா, முஸ்லிம் வர்த்தகர்களின் பல்வேறு கடைத் தொகுதிகள், தர்காக்கள், ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் சான்றிதழ் என ஒரு நேர்கோட்டுத் தொடரில் முஸ்லிம்கள் மீதும் அவர்களின் மத நம்பிக்கைகளின் மீதும் இருப்புக்கான சுதந்திரத்தின் மீதும் பௌத்த பிக்குகளின் தலைமையில் அரச பொலிஸ் பாதுகாப்புடன் தாக்குதல்களும், எதிர்ப்பிரச்சாரங்களும், மக்கள் எதிர்ப்புக்களும் வன்முறை வடிவத்தில் நடந்தும் கூட அவை பற்றி ஒரு சாமானிய அடுத்த சமுகத்தவருக்கு இருக்கும் தார்மீக அக்கறைதானும் இவர்களால் காட்டப்படாது மௌனமாயிருந்ததானது இத்தோடு இவர்களுக்கும் சமுகத்துக்குமான உறவு குறித்த மீள்பரிசீலனையைத் தீவிரமாக வேண்டிநிற்கிறது.

உண்மையில் முஸ்லிம் அரசியலில் மாற்று அரசியல் கருத்தாக்கம் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்தே தோற்றம் பெற்ற ஒன்றென்பதும் அதற்குப் பின்னர் பல்வேறு நடைமுறை அரசியல் பரீட்சார்த்தங்களும் மாற்று அரசியல் முனைப்புகளும் சிவில் சமுகத்தின் ஒருங்கிணைவில் கவனமெடுக்கப்பட வேண்டிய தளங்களாகும்.
அதாவது மக்கள் சக்தி, மக்களபிப்பிராயம் என்பன அதிகாரத்திலிருக்கின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற உளுத்து போன மறைமுக ஜனநாகயகத்தின் எச்ச சொச்சங்களை மீறி சிவில் சக்திகளிடமும் பரவலாகியிருக்கிறது என்ற உண்மையை உட்செரித்து நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பெரும்பான்மையாகவே முஸ்லிம் அரசியல் கருத்தியலானது சிவில் சமுகத்தில் செயற்படும் மாற்றுத் தரப்பினராலேயே மக்களில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்றாலும் அது தற்போதைக்கு மிகையல்ல.
ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் கருத்தியலையும் பிரதிபலிக்கும் சமுகக் குழுக்களின் கூட்டுச் சக்தியென்பதே இலங்கை முஸ்லிம் அரசியல் என்ற கருத்தியலை 2000க்குப் பிறகிருந்து உயிர்ப்பித்துக்கொண்டிருப்பதாக நான் நம்புகின்றேன். அது வெறும் வாக்களிக்கும் செயன்முறையினால் அளவிடப்படுகின்ற சமுகக் கூறு கிடையாது.

இத்தகைய சிவில் சமுகத் தரப்புக்களின் ஒருங்கிணைவும் பிரச்சினையின் உண்மைத்தன்மையினைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான எத்தனமுமே இப் பிரச்சினை உக்கிரமடையத் தொடங்குகின்ற இவ் ஆரம்ப நிலையை மேலும் மோசமாக்கிவிடாமல் தடுப்பதற்கு நம்பிக்கை கொள்ள முடியுமான பொறிமுறையாகத் தென்படுகிறது.

தெள்ளத் தெளிவாகவே சுயநலக் காரணங்களுக்காகவும் அரசாங்கத்தின் பதவிகளுக்காகவும் விலைபோய்விட்ட பாராளுமன்றக்காரர்களைக் கடந்து சிவில் சமுகத் தலைமைத்துவங்கள், ஆளுமைகள், செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து முஸ்லிம் அரசியல் சக்தியினை சிவில் சமுகத்தின் பால் திரட்டியெடுப்பதானது ஒரு மாற்று அரசியல் சக்தியின் நேரடிப் பங்கேற்பினை வலுப்படுத்துவதற்கும், பொது பலா சேனா போன்ற பேரினவாதத்தின் மதத் தீவிரவாத அரச ஊக்கிகளுக்கு உண்மையான மக்கள் பிரதிநிதித்துவத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டையும் எடுத்துரைக்கவும், உரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் உதவமுடியுமான வழிமுறையாகத் தோணுகிறது.

இரண்டாவது முஸ்லிம் அரசியலில் செயற்படும் சிவில் தரப்புக்கள், அரசியல் அமைப்புக்கள், தனிநபர்கள், ஆளுமைகளுக்கிடையிலான உரையாடலின் அவசியம்.

இலங்கை முஸ்லிம் அரசியலுக்குள் தாக்கஞ்செலுத்தும் இரண்டு பிரதான கூறுகளை இதற்குள் அடையாளங்காண முடிகிறது.
அதாவது இலங்கை முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின் மத இருப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரின் அரசியல் கொள்கைகள்.
மற்றது இலங்கை முஸ்லிம்களை அரசியல் இனமாக உட்செரித்துத் தமது மாற்று அரசியல் கருத்தியல்களைக் கொண்டிருக்கும மற்றும் செயற்பட்டுவரும் தரப்பினர்.
இங்கே இவ்விரண்டு நுண்ணிய கருத்தியல் பாகுபாடுகளுக்கும் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்கள், அமைப்புக்கள் மக்களியக்கங்கள் என்பவற்றுக்கிடையிலான விரிவான ஒருமைப்பட்ட புரிதலும் உரையாடல்களும் நிகழ வேண்டியது அவசியமான தேவையாகும்.

எப்போதுமே திரட்டப்பட முடியுமான மக்கள் சக்தியானது நிதானத்துடனும் தெளிவுடனும் புரிந்துகொள்பவர்களாலும் எத்திவைப்பவர்களாலுமே கவனமாக வழிநடாத்தப்பட்டிருக்கின்றது.
இங்கே தேவைப்படுவதாக முன்வைக்க வருவதெல்லாம் சிவில் சமுகத்தரப்புக்களின் ஒருங்கிணைவும், உணர்ச்சிகளைக் கடந்து ஒரு முறையான எதிர்ப்பைத் திரட்டியெடுப்பதற்கான ஒரு பொதுவான சக்தியொன்றின் தேவையையும்தான்.

அத்தகைய சக்தியொன்றின் உருவாக்கமானது மொத்த முஸ்லிம் சமுகத்தினையும் ஒரு தெளிவான வழியில் இப்பிரச்சினைகளின் போது ஒன்றுதிரட்டுவதற்கும் வழிநடாத்துவதற்றும் ஆற்றலும் ஆளுமையுமுள்ளதாக மேலே கூறிய அனைத்துத் தரப்பினரதும் பங்குபற்றுதலுடனேயே சாத்தியப்பட முடியுமானது.

பொதுபலா சேனாவுக்கு எதிராக பல்வேறு சிங்கள, தமிழ் சகோதரர்களும் மனித உரிமை மற்றும் மதவுரிமை அமைப்புக்களும் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்ற இவ்வேளை இப் பிரச்சினை பொது பலா சேனாவோடு முடிந்துவிடப் போவதாகக் குறுகிய எண்ணம் கொள்வதென்பது அல்லது அவ்வாறான நோக்கத்தோடு மட்டும் செயற்படுவதில் திருப்திகொள்வதென்பது ஒருபோதும் ஆரோக்கியமானதும் நிதானமானதுமான முன்னகர்வாக அமையாதென்பதையும் கவனத்திலெடுக்கவேண்டியிருக்கிறது.
செயல் என்பதே நம்மால் இப்போது அவசியமாக உச்சரிக்கப்பட வேண்டிய ஒரேயொரு சொல். அதிலும் ஒன்றுபட்ட செயல்தான் நமது இருப்பினைக் காப்பாற்றும்.

No comments: